தனக்கன்குளம் வாக்குச்சாவடியில் எந்திரம் பழுதால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்
திருப்பரங்குன்றம் தொகுதியில் தனக்கன்குளம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதால், அங்கு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
இதற்காக தொகுதி முழுவதும் 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணி அளவில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆனால், தனக்கன்குளத்தில் 44-வது எண் வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போது, மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
கோளாறை சரிசெய்ய அதிகாரிகள் முயன்றனர்.
காலையிலேயே வாக்களித்துவிடலாம் என்று வந்தவர்கள், ஓட்டுப்போட முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தேர்தல் பிரிவு மண்டல துணை தாசில்தார் மீனாட்சி சுந்தரம் வாக்குச்சாவடிக்கு வந்தார். புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பொருத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தார்.
இதனையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக காலை 8 மணி முதல் அந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்றது.