ரேஷன் கடைக்கு வினியோகத்துக்கு வந்த அரிசி எடை குறைவாக இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டது
புதுவையில் ரேஷன் கடைகளுக்கு வினியோகத்துக்கு வந்த அரிசியின் எடை குறைந்ததால் அதிகாரிகள் அந்த லாரியை அரிசியுடன் திருப்பி அனுப்பினார்கள்.
புதுச்சேரி,
புதுவையில் தேர்தல் முடிந்த நிலையில் ரேஷன் அரிசி வினியோகம் தொடங்கியுள்ளது. இதற்காக தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் இருந்தும், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள தனியாரிடமிருந்தும் டெண்டர் மூலம் அரிசி வாங்கப்படுகிறது.
இந்த அரிசி தரமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்த பின்னரே ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படுகிறது. ரேஷன் கடைகளிலும் பிரச்சினை ஏற்படாதவாறு அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு லாரியில் வந்த அரிசியின் தரம் குறைந்ததாக (பழுப்பு நிறம்) இருந் தது. இதை பரிசோதித்து பார்த்த அதிகாரிகள் அந்த அரிசியை திருப்பி அனுப்பினார்கள்.
இதேபோல் நேற்று ஒரு லாரியில் 25 டன் அரிசி எடுத்து வரப்பட்டது. 20 கிலோ எடை கொண்ட பைகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த அரிசி பைகள் ஒவ்வொன்றிலும் 20 கிராம் வரை அரிசியின் எடை குறைவாக இருந்தது.
இதைத்தொடர்ந்து அந்த அரிசியை இறக்க அனுமதிக்காத அதிகாரிகள் அந்த லாரியையும் திருப்பி அனுப்பினார்கள். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையினால் அரிசி சப்ளை செய்வோர் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.