தனியார் பள்ளிகளுடன் போட்டிபோடும் அரசு பள்ளிகள்; பாழடைந்த கட்டிடங்கள் சீரமைக்கப்படுமா?

தனியார் பள்ளிகளுடன் அரசு பள்ளிகள் போட்டிபோடும் நிலையில் பாழடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2019-05-17 22:59 GMT

புதுச்சேரி,

புதுவையில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் நிதி பெறப்பட்டு பல்வேறு பள்ளிகளின் வகுப்பறைகள் மேம்படுத்தப்பட்டன.

பல்வேறு அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில வழிக்கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த பொதுத்தேர்வுகளின் முடிவுகள் இதை தெளிவுபடுத்தி உள்ளன. குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.85 சதவீத தேர்ச்சியை அரசு பள்ளிகள் எட்டியுள்ளன. அதுமட்டுமின்றி புதுவையில் 35 அரசு பள்ளிகளும், காரைக்காலில் 8 அரசு பள்ளிகள் என 43 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றன.

பிளஸ்–2 தேர்விலும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 86.03 சதவீத தேர்ச்சியை அரசு பள்ளிகள் பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 12.84 சதவீதம் அதிகம். இது பெருமைப்படக்கூடிய வி‌ஷயம்தான்.

இந்தநிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு பள்ளிகள் தற்போது முயற்சியில் இறங்கியுள்ளன. தங்கள் பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து ஆங்காங்கே விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். குறிப்பாக பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர் லேப், குடிநீர் வசதி, அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறை, அனுபவம் உள்ள ஆசிரியர்கள், நூலகம், விளையாட்டு, கைவினை வகுப்புகள் குறித்து அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் தங்கள் பள்ளி குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலன் தருமா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில் நகரப்பகுதியில் உள்ள பிரபல அரசு பள்ளிகளின் கட்டிட நிலைமை மோசமாக உள்ளது. மி‌ஷன் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால் அந்த பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கட்டிட சுவர்களில் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற பயம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

இதேபோல் கட்டிடம் பழுதடைந்ததால் கலவைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி, பான்சியானோ பிரெஞ்சு பள்ளி கட்டிடங்கள் எல்லாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன. நகரின் முக்கியமான பகுதிகளில் உள்ள இந்த பள்ளி கட்டிடங்கள் இதுவரை சீர் செய்யப்படவில்லை. இந்த கட்டிடங்கள் பயனற்றுப்போய் கிடக்கின்றன.

இப்படியிருந்தால் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர எப்படி முன்வருவார்கள்? பள்ளி கட்டிடங்களையும் சீரமைத்து மாணவர்கள் சேரக்கூடிய மனநிலையை அரசு உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி உருவாகும்.

மேலும் செய்திகள்