முதல்-மந்திரி குமாரசாமி தங்கிய ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை சி.எஸ்.சிவள்ளியின் உருவப்படங்கள், 50 தங்க முலாம் பூசப்பட்ட கிண்ணங்கள் சிக்கியது

உப்பள்ளியில் முதல்-மந்திரி குமாரசாமி தங்கிய ஓட்டலில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சி.எஸ்.சிவள்ளியின் உருவப்படங்கள், 50 தங்க முலாம் பூசப்பட்ட கிண்ணங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-14 21:55 GMT
உப்பள்ளி,

கர்நாடகத்தில் நடந்து வரும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசில் நகரசபை நிர்வாகத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் சி.எஸ்.சிவள்ளி. இவர் கர்நாடக சட்டசபைக்கு தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் இருந்து தேர்வானார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக சி.எஸ்.சிவள்ளி மரணம் அடைந்தார். இதனால் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட குந்துகோல் தொகுதி காலியானது. அந்த தொகுதிக்கு மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தல் நடைபெறும் குந்துகோல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சி.எஸ்.சிவள்ளியின் மனைவி குசுமாவதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தலைவர்கள் குந்துகோலில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

வருமான வரித்துறை சோதனை

இந்த நிலையில் குசுமாவதியை ஆதரித்து நேற்று முன்தினம் முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரம் செய்தார். பின்னர் அவர் உப்பள்ளி டவுன் கோகுல்ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரசாமி தங்கியிருந்த ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் என சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய சோதனை அதிகாலை 2 மணி வரை நீடித்தது.

இந்த சோதனையின் போது ஓட்டலின் அறை எண் 307-ல் இருந்து மறைந்த மந்திரி சி.எஸ்.சிவள்ளியின் 11 உருவப்படங்கள், தங்க முலாம் பூசப்பட்ட 50 கிண்ணங்கள், குந்துகோல் தொகுதியின் வாக்காளர்களின் பெயர் பட்டியல் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பரபரப்பு

முதல்-மந்திரி குமாரசாமி தங்கி இருந்த ஓட்டலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது உப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே ஓட்டலில் தான் மந்திரிகள் டி.கே.சிவக்குமார், ஜமீர்அகமது கான், எம்.டி.பி.நாகராஜ் உள்பட காங்கிரஸ் தலைவர்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்களும் தங்கி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்