அரசு ஆஸ்பத்திரியில் கிடந்த துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கிடந்த துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் புலிப்பாக்கம் மதுரை வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரி (வயது 40) ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி செய்து வருகிறார். நேற்று அவர் அரசு ஆஸ்பத்திரியின் முதல் தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவின் அருகே சுத்தம் செய்தபோது 3-வது படியில் ஒரு துப்பாக்கி தோட்டா கிடப்பதை பார்த்தார்.
அதை அவர் ஆஸ்பத்திரி டீன் உஷா சாதாசிவத்திடம் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து டீன் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மேலும் கைதிகளை மருத்துவ சோதனைக்கு அழைத்து வரும் போது உடன் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரரிடம் இருந்து தவறி விழுந்த துப்பாக்கி தோட்டாவா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் துப்பாக்கி தோட்டாவை வீசி விட்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரியில் கிடந்த துப்பாக்கி தோட்டாவால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.