திருப்போரூரில் பட்டப்பகலில் பொக்லைன் எந்திரம் கடத்திய வாலிபர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
திருப்போரூரில் பட்டப்பகலில் பொக்லைன் எந்திரத்தை திருடியவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக உதைத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் கச்சேரி சந்து தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 46). தி.மு.க. நிர்வாகியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் நடத்தி வருகிறார்.
இந்த பொக்லைன் எந்திரத்தை டிரைவர் வினோத் என்பவர் ஓட்டி வந்தார். திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகே பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி விட்டு நேற்று பிற்பகல் 2 மணிக்கு வினோத் சாப்பிட சென்றார். சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அந்தப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
இதனை பயன்படுத்திக்கொண்டு மர்ம நபர் ஒருவர் பொக்லைன் எந்திரத்தை நைசாக கடத்தி சென்று விட்டார். டிரைவர் வினோத் திரும்பி வந்து பார்த்தபோது பொக்லைன் எந்திரம் மாயமாகி இருந்தது. உடனே இதுகுறித்து உரிமையாளர் பரசுராமனுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசில் ஒப்படைப்பு
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரசுராமன், இதுகுறித்து மற்ற வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே திருப்போரூர் அடுத்த மாமல்லபுரம் செல்லும் சாலை ஆலத்தூர் பகுதி வழியாக பொக்லைன் எந்திரம் ஒன்று செல்வதாக வழியில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனே விரைந்து சென்று பார்த்தபோது வெளிமாநில வாலிபர் ஒருவர் அதிவேகமாக பொக்லைன் எந்திரத்தை ஓட்டி சென்றார். பொதுமக்கள் உதவியோடு அவரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பொக்லைன் எந்திரத்தை கடத்தியவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் நாராயணன் மாஞ்சா (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பிடிபட்ட நபர் திருப்போரூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல கடந்த ஒரு வாரகாலம் சுற்றித்திரிந்துள்ளார். இதுபோன்று வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சுற்றி வருகின்றனர். திருப்போரூர் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 4-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. எனவே அச்சம் அடைந்துள்ளோம்’ என்று தெரிவித்தனர்.