மயிலாப்பூரில் மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பலி
மயிலாப்பூரில், சாலையோர மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அடையாறு,
சென்னை மயிலாப்பூர் நொச்சி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 22). தனியார் டிராவல்சில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் விஷ்ணு (23), பாரதிராஜா(26) மற்றும் பாவாடை ராயன்(22). இவர் கள் 4 பேரும் நண்பர்கள்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள ஒரு பாரில் ஐ.பி.எல். கிரிக்கெட் பார்த்தனர். பின்னர் நள்ளிரவில் குடிபோதையில் 4 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
மோட்டார்சைக்கிளை விஷ்ணு ஓட்டினார். மற்ற 3 பேரும் அவருக்கு பின்னால் அமர்ந்து பயணம் செய்தனர்.
மரத்தில் மோதி 2 பேர் பலி
விஷ்ணு மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்ததாக தெரிகிறது. மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். இவர்களில் வெங்கடேசன் மற்றும் விஷ்ணு இருவரும் தலையில் படுகாயம் அடைந்து, அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
2 பேர் படுகாயம்
அவர்களது நண்பர்களான பாரதிராஜா மற்றும் பாவாடை ராயன் இருவரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பாரதிராஜா, மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் பலியான வெங்கடேசன், விஷ்ணு இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.