கும்பகோணம் அருகே தாய் தற்கொலை செய்த 2 நாளில் சிறுவன் மர்ம சாவு போலீசார் விசாரணை

கும்பகோணம் அருகே தாய் தற்கொலை செய்த 2 நாளில் சிறுவன் மர்மமான முறையில் இறந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-05-13 22:15 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமம் மணவேளி தெருவை சேர்ந்தவர் கார்த்தி. ஸ்தபதி. இவருடைய மனைவி சுபஸ்ரீ. இவர்களுடைய மகன் அபிஷேக்(வயது 5).

கார்த்தியும், சுபஸ்ரீயும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சுபஸ்ரீ கடந்த 11-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறுவன் சாவு

இந்த நிலையில் சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட நாளன்று இரவு அவருடைய மகன் அபிஷேக்கிற்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவனை உறவினர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அபிஷேக் பரிதாபமாக இறந்தான்.

முன்னதாக அபிஷேக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் விஷம் குடித்திருக்கலாம் என கூறினர். இதனால் அவனுடைய சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

விஷம் கொடுத்தார்களா?

இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் சாவுக்கான காரணம் என்ன? அவன் விஷம் குடித்தானா? அல்லது வேறு யாராவது அந்த சிறுவனுக்கு விஷம் கொடுத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாய் தற்கொலை செய்து கொண்ட 2 நாளில் சிறுவன் மர்மமான முறையில் இறந்து இருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்