சேலத்தில் இரவில் அடிக்கடி நடக்கும் சம்பவம்: வாலிபர்களை தாக்கி பணம் பறிக்கும் கும்பல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சேலத்தில் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் வாலிபர்களை ஒரு கும்பல் தாக்கி பணம் பறித்து வருகிறது. இதனால் அந்த கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்,
சேலம் மாநகரில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் சேலம் சூரமங்கலம் மற்றும் செவ்வாய்பேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது. அதேசமயம், சேலத்தில் இரவு நேரங்களில் சாலையிலும், மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளையும் ஒரு கும்பல் வழிமறித்து அவர்களை தாக்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றது.
குறிப்பாக சேலம்–ஓமலூர் மெயின்ரோட்டில் காந்தி விளையாட்டு மைதானம் அருகிலும், அண்ணா பூங்கா எதிரிலும் இச்செயல் அடிக்கடி நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு அண்ணா பூங்கா அருகே நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் பகுதியில் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவரை அங்கு நின்ற ஒரு கும்பல் சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது.
குறிப்பாக அண்ணா பூங்கா எதிரில் பஸ் நிறுத்தம் பகுதியில் இரவு நேரத்தில் வாலிபர்கள் சிலர் நின்று கொண்டு அந்த வழியாக தனியாக செல்லும் நபர்களை நோட்டமிட்டு பணத்தை பறித்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல், காந்தி மைதானம் அருகில் பெரியார் மேம்பாலம் கீழ் பகுதியிலும் சிலர் மது அருந்துதல், சூதாட்டம் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் வருவது இல்லை என்றும், இதை போலீஸ் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை தடுக்க சேலம்–ஓமலூர் மெயின்ரோடு, அண்ணா பூங்கா, காந்தி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் அஸ்தம்பட்டி மற்றும் செவ்வாய்பேட்டை போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.