பாளையங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு: முக்கிய பிரமுகர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது அம்பலம் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்-வாகன சோதனை தீவிரம்

பாளையங்கோட்டை அருகே குண்டு தயாரித்து முக்கிய பிரமுகர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2019-05-13 22:30 GMT
நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டத்தில் ஒரு பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான புது வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு அவருடைய மகன்கள் சிவா என்ற நாராயணன் மற்றும் அருள் ஆகியோர் அவ்வப்போது வந்து சென்றனர்.

கடந்த 10-ந் தேதி நள்ளிரவில் இந்த வீட்டின் சமையல் அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து பரபரப்பு ஏற்பட்டது. இதில் வீட்டின் ஜன்னல் உடைந்தது. மேலும் அறை முழுவதும் புகை பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெடித்து சிதறிய வெடிகுண்டு துகள்களை சேகரித்தனர்.

இதையொட்டி சிலரை போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த விசாரணையின்போது, முக்கிய பிரமுகர்களை வெடிகுண்டு வீசி கொல்ல சதித்திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது இவர்களுக்கும், மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

குறிப்பாக பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நடந்த ஒரு கொலையில் தொடர்புடையவர்கள் நெல்லை கோர்ட்டில் ஆஜராகி வருகின்றனர். அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக, கோர்ட்டில் ஆஜராக வரும்போது, அவர்களை வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முடிவு செய்து, அதற்கு தேவையான வெடிகுண்டுகளை தயாரித்து வைத்திருந்தபோது அவை வெடித்தது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று அங்கிருந்த வெடிகுண்டுகளை, வேறு இடத்துக்கு கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும், அந்த கொலை வழக்கு நேற்று நெல்லை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோர் உத்தரவின்பேரில் மாநகரம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. மேலும் மாநகரை சுற்றி உள்ள போலீஸ் நிலையங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டது.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர், வண்ணார்பேட்டை, தாழையூத்து, பேட்டை, மேலப்பாளையம் உள்பட மாநகர பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். வாகனத்தில் சந்தேக நபர்கள் வெடிகுண்டுகளை கொண்டு செல்கிறார்களா? என்று விசாரணை நடத்தினர். இதனால் நெல்லையில் நேற்று ஆங்காங்கே பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்