தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட நச்சு திட்டங்களை தடுக்க வேண்டும் சீமான் பேச்சு
தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட நச்சு திட்டங்களை எப்பாடு பட்டாலும் தடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யாவை ஆதரித்து நேற்று மாலையில் ஓட்டப்பிடாரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது;-
கல்வி மாநில உரிமை. ஆனால் அதை மத்திய அரசு பறித்து விட்டது. காவிரி நீர் கிடைக்கவில்லை. முல்லைபெரியாறுக்கு உரிமை பெற முடியவில்லை. இந்திய கடலில் மீன் பிடிக்கும் உரிமையையும் இழந்துவிட்டோம். வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எதுவும் தமிழர்களுக்காக இல்லை. அங்கு தமிழர்களுக்கு வேலையும் தருவது இல்லை.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்ததே தி.மு.க., அ.தி.மு.க. தான். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை ஏன் சுட்டு கொன்றார்கள்?. அதற்கு யாரிடமும் பதில் இல்லை.
தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசு பா.ஜனதாவின் பினாமி அரசு. அ.தி.மு.க., தி.மு.க. இந்த 2 திருடர்களும் எப்போது சிக்குவார்கள் தெரியுமா?. உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். எங்கள் ஆட்சியில் அவர்கள் கண்டிப்பாக சிக்குவார்கள்.
அவர்கள் நம்மை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள். நம் நிலத்தை இழந்துவிட்டால் இனத்தை இழந்து விடுவோம். மோடி, எடப்பாடியை போன்றவர்கள் இந்த நாட்டில் மிகப்பெரிய தலைவர்களாக இருந்து இந்த நாட்டை ஆளும் போது நாம் இந்த நாட்டில் தேச துரோகிகளாக இருந்து இந்த நாட்டை காப்பாற்றுவோம். அதில் எந்த சிக்கலும் எங்களுக்கு இல்லை. எப்பாடு பட்டாலும் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட நச்சு திட்டங்களை தடுக்க வேண்டும். உங்களை நம்பி தான் நாங்கள் இந்த புரட்சிகர அரசியலை முன்னெடுத்துள்ளோம். மண்ணுக்கும், மக்களுக்கும் நின்று உழைக்க வேண்டும் என்ற கொள்கை முடிவோடு நாங்கள் இந்த களத்தில் இருக்கிறோம். எங்களால் உயரமாக எண்ண முடியும். அந்த எண்ணத்தை செயல்படுத்த முடியும். எனவே எங்களை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.