அதர்மம் தழைப்பதுபோல் தெரிந்தாலும் தர்மமே வெல்லும் - நாராயணசாமி பேச்சு

அதர்மம் தழைப்பதுபோல் தெரிந்தாலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-05-12 23:45 GMT

புதுச்சேரி,

புதுவையில் கம்பன் விழா நேற்று 3–வது நாளாக நடந்தது. விழாவில் நடந்த பாராட்டரங்கம் நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். பின்னணி பாடகி பி.சுசீலாவை பாராட்டி முதல்–அமைச்சர் நாராயணசாமி நினைவு பரிசு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

பிரபல பாடகியான பி.சுசீலா பாடலை கேட்கும்போது நாம் மெய்மறப்போம். அவருக்கு இப்போது நாம் பாராட்டு செய்கிறோம். விதி என்பது எல்லோரையும் விடுவதில்லை. என்னையும் விடுவதில்லை. விதியிடம் சிக்காதவர்கள் யாரும் இல்லை. இருந்தாலும் அதை சிறிது சிறிதாக மதியால் வெல்லுகிறோம்.

அறம் எப்போதுமே வெல்லும். இடையில் அதர்மம் தழைப்பதுபோல் தெரியும். இறுதியில் தர்மமே வெல்லும். இதைத்தான் நான் எனது சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் பார்த்துள்ளேன். அறவாழ்க்கை வாழ்ந்தால்தான் எப்போதும் வெற்றிபெற முடியும். இதைத்தான் கம்பராமாயணமும் சொல்கிறது. புதுவையில் எந்த அரசாக இருந்தாலும் புலவர்கள், எழுத்தாளர்களை கவுரவித்து வருகிறோம்.

இப்போது நமது கலாசாரம் மாறி வருகிறது. நாம் நமது மொழி, கலாசாரத்தை காக்கவேண்டும். நான் வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்திக்கும்போது அவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழகம் அல்லது புதுச்சேரியில்தான் படிக்க வைக்க விரும்புகின்றனர்.

பின்னணி பாடகி சுசீலா பெருமை மிக்கவர். அவர் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவர்களது பாட்டுகளை கேட்பதால் நமது குழப்பங்கள் போகிறது. நோய்களுக்கான சிகிச்சையில் இசை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் மியூசிக் தெரபி என்ற முறையை ஆரம்பித்து உள்ளனர்.

அதேபோன்ற ஒரு மையத்தை புதுவையில் அமைக்க இசையமைப்பாளர் இளையராஜா புதுவை அரசை அணுகினார். அதற்கு தேவையான நிலத்தை தரவும் புதுவை அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

மேலும் செய்திகள்