திருப்பூர் மாநகரில் சரக்கு வாகனங்களில் தொடரும் விபரீத பயணம் கண்டுகொள்ளாமல் இருக்கும் போலீசார்
திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் சரக்கு வாகனங்களில் விபரீத பயணம் செய்வது தொடர்ந்து வருகிறது. ஆனால் போக்குவரத்து போலீசார் இதை கண்டுகொள்ளாமலே இருந்து வருகின்றனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநகருக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களை இயக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து, அதன் உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகின்றனர். ஆனால், சில சமயங்களில் விதிமுறைகள் மீறும் வாகனங்களை போலீசார் கண்டும், காணாமலும் இருந்து வருகின்றனர்.
அதன்படி மாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், தனியார் நிகழ்ச்சிகள், விருந்து நிகழ்ச்சிகள், விழாக்கள் உள்ளிட்டவற்றிற்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது என்பதும், இந்த கட்டுப்பாட்டை மீறி ஆட்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது, விதிமுறையாக இருந்து வருகிறது. ஆனால் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி செல்லும் விபரீத பயணத்தை பலர் மேற்கொண்டு வருகின்றனர். சில நேரங்களில் போக்குவரத்து போலீசார் சம்மந்தப்பட்ட வாகனங்களை வழிமறித்து அவற்றிற்கு அபராதம் விதித்தாலும், பெரும்பாலான வாகனங்களை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் சட்ட விதிகளுக்கு புறம்பாக சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–
திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களை அழைத்து செல்ல பெரும்பாலும் சரக்கு வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். செலவு மிச்சமாகும் என்ற அடிப்படையில் லாரிகள், டெம்போக்கள், சரக்கு வேன்கள் உள்ளிட்டவை மூலம் அளவுக்கு அதிகமாக ஆட்களை அழைத்து செல்கின்றனர். இம்மாதிரியான வாகனங்கள் அவ்வப்போது விபத்துக்குள்ளாவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதுபோல ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் போது மட்டுமே, போலீசாரும் தங்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகின்றனர்.
ஆனால், அந்த சம்பவத்தை மறந்த உடன், கட்டுபாடுகளும் தளர்ந்து விடுகின்றன. போலீசார் இதை கண்டுகொள்ளாமலே இருந்து வருகின்றனர். இது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. இது போலீசாருக்கு தெரிந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் மெத்தன போக்கிலேயே இருந்து வருகின்றனர். வேறு பல்வேறு காரணங்களுக்காக வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு, அபராதம் விதிக்கும் போலீசார், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்பவர்கள் மீது ஏன் கடும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் உயர் அதிகாரிகளும் இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.