13¾ கிலோ தங்க நகைகள் மாயமான வழக்கு: புதுக்கோட்டையில் வங்கிகள்- தனியார் நிதி நிறுவனங்களில் போலீசார் விசாரணை

13¾ கிலோ தங்க நகைகள் மாயமான வழக்கில், புதுக்கோட்டையில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் நகைகள் அடகு வைக்கப்பட்டு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-12 22:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் மாரிமுத்து என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 28-ந் தேதி இவரை காணவில்லை என்று அவருடைய மனைவி ராணி கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் வங்கியில் கோடிக்கணக்கில் நகைகள் காணாமல் போனதாக தகவல் வெளியானது. கடந்த 29-ந் தேதி மாரிமுத்துவின் கார் எரிக்கப்பட்ட நிலையில் வல்லத்திராக்கோட்டை பகுதியில் போலீசார் மீட்டனர்.

மேலும் மாரிமுத்துவின் உடலை அழுகிய நிலையில் கோடியக்கரை கடல் பகுதியில் மீட்டனர். இதனையடுத்து வங்கியின் முதுநிலை மேலாளர் மாரிஸ் கண்ணன் டவுன் போலீசில் அளித்த புகாரில், வங்கியில் 13¾ கிலோ தங்க நகைகள் காணவில்லை என்றும், இதன் மதிப்பு ரூ.4 கோடியே 84 லட்சம் என்றும் அதில் கூறியிருந்தார்.

போலீசார் விசாரணை

இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், மாரிமுத்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை கையாடல் செய்து கவரிங் நகைகளை வைத்து விட்டு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணத்தை பெற்று பின்னர் மீண்டும் அந்த நகைகளை மீட்டு விற்றுள்ளார். மேலும் நகைகள் உண்மையானதா? போலியானதா என்பதை வங்கியில் அதிகாரிகள் சோதனை செய்யாமல் நகைகள் உள்ள பாக்கெட்டை மட்டுமே சரி பார்த்து உள்ளனர். அதனால் மாரிமுத்து செய்த மோசடி வங்கி அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனையில், அவரது கழுத்து எலும்பு, விலா எலும்பு ஆகியவை முறிந்த நிலையில் உள்ளதால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வங்கி அதிகாரிகள், மாரிமுத்துவின் மனைவி மற்றும் அவரது உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

வங்கிகள்- நிதி நிறுவனங்களில்...

விசாரணையில், வங்கியில் இருந்து எடுத்த நகைகளை மாரிமுத்து புதுக்கோட்டையில் உள்ள வங்கிகள், நகை அடகு கடைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் தனது பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்களில் அடகு வைத்தது தெரியவந்து உள்ளது. இதையடுத்து போலீசார் புதுக்கோட்டையில் உள்ள வங்கிகள், நகை அடகு கடைகள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு சென்று, அங்கு மாரிமுத்து அடகு வைத்து உள்ள நகைகளின் விபரங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாரிமுத்து, அவரது உறவினர்களின் பெயரில் அடகு வைக்கப்பட்டு உள்ள நகைகளின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். வங்கிகள், நகை அடகு கடைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மாரிமுத்துவின் உறவினர்கள் பெயரில் வைக்கப்பட்டு நகைகளின் விவரங்களை முழுவதுமான போலீசாரிடம் தெரிவிக்காததால் நகைகளை மீட்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நகைகள் அடகு வைப்பு

இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், வங்கி ஊழியர் மாரிமுத்து வங்கியில் இருந்து எடுத்த நகைகளை புதுக்கோட்டையில் உள்ள வங்கிகள், நகை அடகு கடைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து உள்ளார். இது குறித்து நாங்கள் விசாரணை நடத்தியதில், அவர் பெயரில் வைத்த நகைகளின் விவரங்கள் மட்டும் எங்களுக்கு கிடைத்து உள்ளது. இந்த நகைகளை மீட்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் மாரிமுத்து, தனது உறவினர்கள் பெயரிலும் நகைகளை அடகு வைத்து உள்ளார். இந்த நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மாரிமுத்து யார் யார் பெயரில் நகைகளை அடகு வைத்து உள்ளார் என்ற விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம் என்றார்.

மேலும் செய்திகள்