திருமங்கலம் அருகே அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

திருமங்கலம் அருகே சரிவர இயக்கப்படாததால் அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-11 22:30 GMT
செக்கானூரணி,

திருமங்கலம் அருகே உள்ளது பொன்னமங்கலம் கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமம் வழியாக திருமங்கலத்தில் இருந்து வாகைக்குளத்திற்கும், திருமங்கலத்தில் இருந்து கருமாத்தூருக்கும், மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மேலனேந்தலுக்கும் 3 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சமீப காலமாக பொன்னமங்கலம் கிராமத்திற்கு இந்த பஸ்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்வதில்லை. மேலும் இடையிடையே பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பஸ் வசதியின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று பொன்னமங்கலம் பொதுமக்கள், தங்களது கிராமத்திற்கு சரியான நேரத்திற்கு வராமலும், சில தினங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுவதையும் கண்டித்து நேற்று அவர்கள் 3 அரசு பஸ்களையும் அடுத்தடுத்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொன்னமங்கலம் வழியாக அரசு பஸ்களை சீராக இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்