சாத்தான்குளம் அருகே கோஷ்டி மோதல்: வாலிபர் படுகாயம்; 11 பேர் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-05-11 21:30 GMT
சாத்தான்குளம், 

சாத்தான்குளம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டாண்மை பிரச்சினை

சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேந்திரமூர்த்தி (வயது 55). ஊர் நாட்டாண்மை. அதே பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன் (31). இவர் சில நாட்களுக்கு முன்பு நாட்டாண்மையை மாற்றம் செய்ய வேண்டும் என்று சாத்தான்குளம் தாசில்தாரிடம் புகார் மனு அளித்தார். இந்த நிலையில் நேற்று அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேந்திரமூர்த்தியின் உறவினர்கள் முருகன், செந்தில், முரளிதரன், ராமதுரை, நாராயணன் ஆகிய 5 பேரும் மதுசூதனனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மதுசூதனன் பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

11பேர் மீது வழக்கு

இதுகுறித்து மதுசூதனனும், ராஜேந்திரமூர்த்தியும் சாத்தான்குளம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். மதுசூதனன் அளித்த புகாரின்பேரில் ராஜேந்திரமூர்த்தி, முருகன், செந்தில் உள்பட 6 பேர் மீதும், ராஜேந்திரமூர்த்தி அளித்த புகாரின்பேரில், மதுசூதனன், அவருடைய தந்தை ராமச்சந்திரன், தாயார் கலைவாணி, உறவினர் திருநாமசெல்வி, உமா மகேஷ்வரி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்