ஆரல்வாய்மொழியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான பாலப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ஆரல்வாய்மொழியில் நடக்கும் பாலப்பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த பாலப்பணியை விரைந்து முடிக்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆரல்வாய்மொழி,
நாகர்கோவில்-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் பழைய பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்டும்பணி நடைபெற்றது. தற்போது பாலம் கட்டி முடிக்கப்பட்டாலும் இன்னும் சாலையுடன் இணைக்கவில்லை. மேலும் பாலத்தின் அருகே உள்ள பள்ளமும் மூடப்படாமல் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள்.
மேலும் பாலப்பணி காரணமாக இந்த பகுதியில் வாகனங்கள் ஒரு பக்கமாக மட்டுமே சென்று வருகின்றன. இதனால் இரு பகுதிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே பாலப்பகுதியை கடக்க 30 நிமிடங்கள் வரை ஆகிறது. போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பாலப்பணியை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் ஆரல்வாய்மொழியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள் செல்வகுமார், தாணு, ராஜபாபு, விஜய், கல்யாணசுந்தரம், ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் பாலத்தில் நின்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.