கார்கள், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மும்பையை சேர்ந்த தம்பதி உள்பட 6 பேர் சாவு
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார்கள், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மும்பையை சேர்ந்த தம்பதி உள்பட 6 பேர் பலியாகினர்.
வசாய்,
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார்கள், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மும்பையை சேர்ந்த தம்பதி உள்பட 6 பேர் பலியாகினர்.
நேருக்கு நேர் மோதி விபத்து
பால்கர் மாவட்டம் காசா அருகே மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள அம்போலி கிராமம் பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது குஜராத் நோக்கி சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை டிரைவர் வலது புறமாக திருப்பி உள்ளார்.
எனினும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. மேலும் திசைமாறி எதிர்பக்க சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது கார் அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை தம்பதி
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காசா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கிடந்த 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோக்டா கிராமத்தை சேர்ந்த நவ்நாத் என்பதும், காரில் வந்து பலியானவர்கள் மும்பை காந்திவிலியை சேர்ந்த ராகேஷ் ஷா, அவரது மனைவி பிரதிபா ஷா, மற்றும் வான்காவை சேர்ந்த ஜாதவ், போரிவிலியை சேர்ந்த ஆகாஷ் சவார், திலிப் சந்தானே என்பது தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.