கடன் தொல்லையால் அவதி: தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை மத்தூர் அருகே பரிதாபம்
மத்தூர் அருகே கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
மண்டியா,
மத்தூர் அருகே கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தூக்கில் பிணமாக கிடந்தனர்
மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கே.எம்.தொட்டி அருகே மேலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜூ (வயது 28). இவருடைய மனைவி மஞ்சுளா (24). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அவர்களின் வீடு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது நாகராஜூவும், மஞ்சுளாவும் தூக்கில் பிணமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தற்கொலை
அதன்பேரில் மத்தூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கதவை உடைத்து, தூக்கில் பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நாகராஜூ அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அவரால் கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால் கடன் கொடுத்தவர், தினமும் வீட்டுக்கு வந்து தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு நாகராஜூவும், அவருடைய மனைவியும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
சோகம்
இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.