சேலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

சேலம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

Update: 2019-05-10 22:30 GMT
சேலம், 

சேலம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் உள்ளிட்ட 19 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் மொத்தம் 1,562 மாணவ, மாணவிகள் சேர்த்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த கல்வி ஆண்டுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை வழங்கப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 584 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதில் பூர்த்தி செய்யப்பட்ட 7 ஆயிரம் விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்தன.

மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், அகதிகள், தேசிய மாணவர் படையினர், மற்றும் மலைவாழ் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் கூறியதாவது:-

இந்த ஆண்டு இளங்கலை பாடப்பிரிவுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டு உள்ளது. நேற்று முதல் நாள் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் 28 மாற்றுத்திறன் மாணவர்கள், 1 மாணவி என மொத்தம் 29 பேர் பல்வேறு பாடப்பிரிவில் சேர்ந்து உள்ளனர். அதே போன்று மலை வாழ் பிரிவினருக்கு 1 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நேற்று 12 மாணவர்கள், 1 மாணவி என மொத்தம் 13 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த கலந்தாய்வு வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது. 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்