நாமக்கல்லில் ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
நாமக்கல்லில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் வலி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நாமக்கல்,
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 28). இவர் கடந்த 2 வருடங்களாக நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் நாமக்கல் ஆயுதப்படை போலீசார் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அடுத்த நல்லிப்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் தனியாக தங்கி இருந்த போலீஸ்காரர் கிருஷ்ணக்குமார் திடீரென வலி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டு நாமக்கல் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நல்லிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் பணியின்போது கிருஷ்ணகுமார் தவறு செய்ததால் ஆயுதப்படை போலீஸ் அதிகாரி அவரை திட்டியதும், அதனால் மனமுடைந்த கிருஷ்ணகுமார் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
மேலும் அந்த அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகுமாரின் பெற்றோரிடம் அவரை பற்றி புகார் தெரிவித்ததாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கிருஷ்ணகுமாரின் மனைவி கோபித்துக்கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் வலி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.