முன்னாள் எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை: உடந்தையாக இருந்த கணவன்-மனைவி கைது

முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை வழக்கில் அவரது மகன் பிரவீனுக்கு உடந்தையாக இருந்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-10 23:15 GMT
அடையாறு,

திருச்செங்கோடு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தைவேலு, 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி ரத்தினம் (வயது 63). இவர், சென்னை சாஸ்திரி நகர் 6-வது அவென்யூவில் வசித்து வந்தார். இவருக்கு சுதா என்ற மகளும், பிரவீன் (35) என்ற மகனும் உள்ளனர்.

சுதாவுக்கு திருமணமாகி குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகிறார். பிரவீன், மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டு, சில மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பினார்.

சொத்து தகராறு மற்றும் வெளிநாட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்தது தொடர்பாக தாய் ரத்தினத்துக்கும், பிரவீனுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன், பெற்ற தாய் என்றும் பாராமல் கடந்த மாதம் 14-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த ரத்தினத்தின் கை, கால்களை கட்டி, வாயில் பேப்பரை அடைத்து டேப்பால் ஒட்டி அவரது கழுத்தை நெரித்தும், கத்தியால் மார்பில் குத்தியும் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாஸ்திரிநகர் போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து பிரவீனை வலைவீசி தேடி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் பொருட்டு அவரது பாஸ்போர்டையும் முடக்கினர்.

ஆனால் இதுவரையிலும் தலைமறைவாக உள்ள பிரவீன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணும் கொலை நடந்த நாள் முதல் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் துப்பு துலக்க பல வகைகளில் முயன்று வந்த தனிப்படை போலீசார், கொலை சம்பவத்துக்கு முன்னதாக பிரவீன், தனது செல்போனில் இருந்து யாருடன் எல்லாம் பேசி உள்ளார்? என அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

அதில் கொலை நடப்பதற்கு முன்பு அவர் 2 செல்போன் எண்களுக்கு அதிகமாக தொடர்பு கொண்டது தெரியவந்தது. அது யாருடைய செல்போன் என போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவை சென்னை பாலவாக்கம் ஜீவரத்தினம் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்தியஜோதி (36) மற்றும் அவருடைய மனைவி ராணி (34) ஆகியோருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில் கணவன்-மனைவி இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் இவர்கள் இருவரும் பிரவீனுடன் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த திடுக்கிடும் உண்மை தெரியவந்தது.

பிரவீனுடன் கடந்த 4 வருடமாக பழக்கத்தில் இருந்த சத்தியஜோதி மற்றும் ராணியிடம், பிரவீன் சொத்து சம்பந்தமாக தனது தாயாருடன் தகராறு உள்ளது. அது சம்பந்தமாக தனது தாயாரை மிரட்டவும், அடிக்கவும் தனக்கு உதவுமாறும், அதற்கு பணம் தருவதாகவும் கூறியதால் தாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டதாக போலீசாரிடம் இருவரும் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று பிரவீனை சத்தியஜோதிதான் தனது மோட்டர் சைக்கிளில் ஏற்றிச்சென்று கொலையான ரத்தினம் வீட்டருகே விட்டு விட்டு யாராவது வருகிறார்களா? என நோட்டமிட்டு உள்ளார். பின்னர் கொலை நடந்த பிறகு நேராக சத்தியஜோதி வீட்டுக்கு சென்ற பிரவீன், அங்கே குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு அங்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த தனது பையை எடுத்துக்கொண்டு சென்டிரல் ரெயில் நிலையம் செல்ல வேண்டும் என கூறியதால் அதன்படியே தனது மோட்டார் சைக்கிளில் அங்கு கொண்டு போய் விட்டதாகவும் சத்தியஜோதி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து இந்த கொலையில் பிரவீனுக்கு உடந்தையாக இருந்த சத்தியஜோதி மற்றும் அவருடைய மனைவி ராணி இருவரையும் சாஸ்திரி நகர் இன்ஸ்பெக்டர் பலவேசம் கைது செய்தார். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்