தமிழகத்துக்கு வருகிற கேடுகளை எதிர்க்க “துணிச்சல் இல்லாத அ.தி.மு.க. அரசை தூக்கி எறிய வேண்டும்” வல்லநாட்டில் வைகோ பிரசாரம்

“தமிழகத்துக்கு வருகிற கேடுகளை எதிர்க்க துணிச்சல் இல்லாத அ.தி.மு.க. அரசை தூக்கி எறிய வேண்டும்” என்று வல்லநாட்டில் நடந்த பிரசாரத்தில் வைகோ கூறினார்.

Update: 2019-05-10 22:30 GMT
தூத்துக்குடி, 

“தமிழகத்துக்கு வருகிற கேடுகளை எதிர்க்க துணிச்சல் இல்லாத அ.தி.மு.க. அரசை தூக்கி எறிய வேண்டும்” என்று வல்லநாட்டில் நடந்த பிரசாரத்தில் வைகோ கூறினார்.

பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் வல்லநாட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அங்கு திரண்டு இருந்த மக்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வேலையின்றி தவிப்பு

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்கள் தீர்க்கப்படவில்லை. கல்வி கடன்கள் நீக்கப்படவில்லை. பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்யாமல் உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. இளைஞர்கள் 80 லட்சம் பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். காரணம் இங்குள்ள அரசு ஊழல் அரசாக இருக்கிறது. இவர்களின் அணுகுமுறையால் தமிழகத்துக்கு வர வேண்டிய பல தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதனால் இருக்கின்ற நகைகளை அடமானம் வைத்து படிக்கவைத்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காததால் தாய்மார்கள் கஷ்டப்படுகிறார்கள்.

தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற உடன், 5 பவுன் வரை வங்கியில் தங்க நகை கடன் பெற்றவர்களுக்கு அவர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்து, தங்க நகைகளை பெற்று கொடுப்பதாக அறிவித்து உள்ளார்.

துணிச்சல் இல்லாத அரசு

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் ஏற்படும் பிரச்சினை குறித்து கேட்டறிய செல்லும் பிரதமர் மோடி, தமிழகத்தில் கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக போராடிய மக்கள் மீது போலீசை ஏவி, இனி யாரும் போராடக்கூடாது என்று 13 பேரை சுட்டுக் கொலை செய்தது. அந்த ரத்தத்துளிகளை நினைவுபடுத்தி கேட்கிறேன். அந்த செயலுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். தண்டனை கொடுக்கும் நீதிபதிகள் நீங்கள்.

தமிழகத்துக்கு வருகிற கேடுகளை இந்த அரசால் தடுக்க முடிகிறதா? நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வந்து தேனி மாவட்டத்தை பாழ்படுத்த துடிக்கிறார்கள். முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. இதனை தடுக்கக்கூடிய, எதிர்க்கக்கூடிய துணிச்சல் இந்த அ.தி.மு.க. அரசுக்கு இல்லை. இதனால் பாதிக்கப்படுவது தமிழகம் தான். இந்த அரசை தூக்கி எறிய வேண்டும்.

தி.மு.க. வெற்றி பெறும்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மகத்தான வெற்றியை பெறுவார்கள். இந்தியா முழுவதும் மோடி அணி தோற்கும். நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். அதேபோல் ஓட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து அவர் தெய்வச்செயல்புரம், மேலதட்டப்பாறை, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசநூத்து ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, வேட்பாளர் சண்முகையா, தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் புதுக்கோட்டை செல்வம் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்