மதுரை அரசு ஆஸ்பத்திரியில், மின்தடையால் 5 பேர் பலியானது குறித்து பதில் அளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் 5 பேர் பலியானது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வெரோனி காமேரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
மதுரையில் கடந்த 7-ந்தேதி இரவு இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியிலும் மின் தடை ஏற்பட்டது. மாற்று ஏற்பாடாக இருந்த ஜெனரேட்டர் பழுதடைந்த நிலையில் இருந்தது.
இதனால் ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானதாக செய்திகள் வெளியானது. பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இதுபோல உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் உயிரிழப்புக்கு அங்குள்ள மருத்துவ கருவிகளை முறையாக பராமரிக்காததும், டாக்டர்களின் கவனக்குறைவும் தான் காரணம்.
எனவே இந்த சம்பவம் தொடர்பாக எய்ம்ஸ் டாக்டர்கள், ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்.
மின் பொறியாளர், உயிரி மருத்துவ பொறியாளர்களைக் கொண்ட குழு அமைத்து அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஜெனரேட்டர்கள், வென்டிலேட்டர் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை ஆய்வு செய்து, அவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பலியான 5 பேர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியின் தலைவர் குருசங்கர் தாக்கல் செய்த மனுவில், மக்களின் சுகாதாரத்தில் அக்கறை கொண்ட அரசுகள், ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை சுகாதாரத்துக்காக ஒதுக்குகின்றன. அந்த நிதியினை முறையாக பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்வது அவசியம். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தேவையான மருத்துவ உபகரணங்களை ஏற்படுத்தவும், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் நிபுணர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
விசாரணை முடிவில், மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் மின் தடையால் 5 பேர் இறந்தது குறித்தும், தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்துவதற்கான நிபுணர் குழு அமைப்பது குறித்தும் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை இந்த மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.