‘தகுதியான பதவி அளிக்காமல் மாநில அரசு என்னை புறக்கணிக்கிறது’ முதல்-மந்திரிக்குமூத்த ஐ.பி.எஸ். அதிகாரி பரபரப்பு கடிதம்

தகுதியான பதவி அளிக்காமல் மாநில அரசு என்னை புறக்கணிக்கிறது என மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சய் பாண்டே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2019-05-09 23:00 GMT
மும்பை,

தகுதியான பதவி அளிக்காமல் மாநில அரசு என்னை புறக்கணிக்கிறது என மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சய் பாண்டே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பரபரப்பு கடிதம்

மாநில ஊர்காவல் படை இயக்குனர் ஜெனரலாக (ஐ.ஜி.) இருப்பவர் சஞ்சய் பாண்டே. நேர்மையான போலீஸ் அதிகாரி என பெயர் எடுத்தவர். 1993-ம் ஆண்டு மும்பை கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர். எனினும் இவரது திறமைக்கு ஏற்ற பதவியை மாநில அரசு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்தநிலையில் சஞ்சய் பாண்டே மாநில செயலாளர், உள்துறை கூடுதல் செயலாளர் மற்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

அரசு புறக்கணிக்கிறது

நான் புறக்கணிக்கப்படுகிறேன். 2000-ம் ஆண்டு முதல் அரசால் பலமுறை எனக்கு அநீதி இழைக்கப்பட்டது. எனினும் பல்வேறு தீர்ப்பாயங்கள், ஐகோர்ட்டுகளில் முறையிட்டு அதில் வெற்றி பெற்றேன். 3-க்கும் அதிகமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை அரசுக்கு எதிராக தாக்கல் செய்ய வேண்டி நிலை ஏற்பட்டது. தற்போது வரை அரசு தகுதியான பதவியையும், பதவி உயர்வும் அளிக்காமல் என்னை புறக்கணித்து வருகிறது.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘‘ஐ.பி.எஸ். அதிகாரியின் கடிதத்தை ஆய்வு செய்ய உள்ளேன். அதன்பிறகு விதிகளுக்குட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

மேலும் செய்திகள்