ஓட்டப்பிடாரம் தொகுதியில் “குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்” அமைச்சர்கள் பிரசாரம்

“ஓட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்“ என்று பிரசாரத்தின்போது அமைச்சர்கள் கூறினர்.

Update: 2019-05-09 22:00 GMT
தூத்துக்குடி, 

“ஓட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்“ என்று பிரசாரத்தின்போது அமைச்சர்கள் கூறினர்.

அமைச்சர்கள் பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் நேற்று காலையில் தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து பண்டாரம்பட்டி, தேவர் காலனி, ஹவுசிங்போர்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். மாலையில் கே.வி.கே.சாமி நகர், பாரதிநகர், தாளமுத்துநகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தனர்.

முற்றுப்புள்ளி

பிரசாரத்தில் அமைச்சர் காமராஜ் பேசும்போது, “இந்த பகுதியில் உள்ள எல்லா வாக்குகளையும் நம்முடைய வாக்குகளாக மாற்ற வேண்டும். எல்லோரும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்ற விருப்பத்தில் இருக்கிறார்கள். இந்த பகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை தாருங்கள். இங்கு தண்ணீர் பிரச்சினையே இல்லாமல் செய்திடுவோம் என்ற உத்தரவாதத்தை தருகிறோம். தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்“ என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, “இந்த இடைத்தேர்தல் வர காரணமானவர்களை நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும். மக்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்“ என்றார். பிரசாரத்தில், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர்கள் மனோஜ்பாண்டியன், சி.த.செல்லப்பாண்டியன், பிரபாகரன் எம்.பி., முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படகில் சென்று...

ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தருவைகுளம் பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த மீன்பிடி படகில் சென்று கடலோரங்களில் நின்ற மீனவர்களிடம் அ.தி.மு.க. ஆட்சியில் மீனவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறி, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் செய்திகள்