நாடாளுமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கைக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் வீர ராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் கலந்து கொண்ட முதற்கட்ட விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியே பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டுஉள்ளது.
மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையினை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தனித்தனியே 6 பிரிவுகளாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் நடைபெறும்.
இதேபோல பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கண்காணிப்பில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின்போது முதலாவதாக தபால் வாக்குகள், அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் 42 அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.
ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மேசைகளுக்கு ஒரு முகவர் வீதம் தலா 14 முகவர்களும், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஒரு முகவர் என மொத்தம் 15 முகவர்களை நியமிக்கலாம். இவ்வாறு நியமிக்கப்படும் முகவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரின் கையொப்பமிட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்ற பின்னரே வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது முகவர்களுக்கான அடையாள அட்டையினை உரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைபேசி உள்ளிட்ட எந்தவிதமான மின்னணு சாதனங்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை. தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முறையே பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், ஆர்.டி.ஓ.க்கள் ராமநாதபுரம் சுமன், பரமக்குடி ராமன், அறந்தாங்கி சுப்பையா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கயல்விழி, தனித்துணை ஆட்சியர் (முத்திரை) கார்த்திகைசெல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணபிரான் உள்பட அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.