குன்னூர் அருகே, ரேலியா அணையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

குன்னூர் அருகே ரேலியா அணையில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-05-09 23:00 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது ரேலியா அணை. இது குன்னூர் நகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. 43.7 அடி கொள்ளளவு கொண்ட ரேலியா அணை, அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது. இந்த அணை பகுதிக்கு உள்ளூர் மக்களோ, சுற்றுலா பயணிகளோ செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தடையை மீறி சிலர் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள கம்பிச்சோலை காந்தி நகரை சேர்ந்த கிளமெண்ட் அலெக்ஸ் (வயது 19), கெவின் (19), பிரசாந்த்(17), ரகுவரன் (14), பிரதீப் (14) ஆகியோர் நேற்று காலை 10 மணிக்கு ரேலியா அணைக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மதியம் 1 மணியளவில் குளிப்பதற்காக ரகுவரன் தண்ணீரில் இறங்கினார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற அவர், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அவரை காப்பாற்ற கிளமெண்ட் அலெக்ஸ் தண்ணீரில் குதித்தார். ஆனால் அவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். பின்னர் சிறிது நேரத்தில் 2 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து மற்ற 3 பேரும் கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் குன்னூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியம், குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் ஆகியோர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கிராம மக்களும் அங்கு குவிந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் அணையில் இறங்கி கிளமெண்ட் அலெக்ஸ் மற்றும் ரகுவரன் ஆகியோரது உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ரேலியா அணையில் மூழ்கி உயிரிழந்த கிளமெண்ட் அலெக்ஸ் கேத்தியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டும், ரகுவரன் வெலிங்டன் கன்டோன்மெண்ட் பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்