காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி குமாரசாமி மாற்றமா? சித்தராமையா பரபரப்பு பேட்டி
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி பதவியில் இருந்து குமாரசாமி மாற்றப்படுகிறாரா? என்ற கேள்விக்கு சித்தராமையா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
மீண்டும் முதல்-மந்திரி...
முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இது கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே மறைமுக மோதலை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து உப்பள்ளி விமான நிலையத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
பதவி காலியாக இல்லை
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், என் மீதுள்ள மரியாதை காரணமாக, நான் மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று கூறி வருகின்றனர். தற்போது கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவி காலியாக இல்லை. கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி பதவி குமாரசாமிக்கு விட்டு கொடுக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி பதவியில் குமாரசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி பதவியில் இருந்து குமாரசாமியை மாற்றுவது தொடர்பாக இதுவரை எந்த விதமான பேச்சுகளும் நடைபெறவில்லை.
முதல்-மந்திரி பதவியில் இருந்து குமாரசாமியை மாற்ற சாத்தியமில்லை. அதுபோன்று பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் தான் செய்திகள் வருகின்றன. கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்-மந்திரியாக இருப்பார். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அப்போது, நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர்.
ஆட்சிக்கு வரப்போவதில்லை
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கர்நாடக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தபோவதில்லை. கர்நாடகத்தில் பா.ஜனதா எக்காரணத்தை கொண்டும் இனிமேல் ஆட்சிக்கு வரப்போவதில்லை. இதற்கு முன்பு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. தற்போது அந்த சூழ்நிலை இல்லை. பா.ஜனதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என 3 பேர் முதல்-மந்திரியாக இருந்தனர்.
ஊழலில் ஈடுபட்டதாக 6 மந்திரிகள் சிறைக்கு சென்றிருந்தனர். மக்களுக்காக எந்தவொரு திட்டங்களையும் பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரவில்லை. பா.ஜனதாவால் ஊழலற்ற ஆட்சி நடத்த சாத்தியமில்லை. அப்படிப்பட்ட பா.ஜனதாவுக்கு மக்கள் எதற்காக ஓட்டுப்போடுகிறார்கள்? என்று தெரியவில்லை. இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.