ஆவணங்கள் இன்றி சொகுசு காரில் கொண்டு சென்ற 18 வாக்கி டாக்கிகள் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

ஆவணங்கள் இல்லாமல் சொகுசு காரில் கொண்டு சென்ற 18 வாக்கி டாக்கிகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-08 23:15 GMT
சூலூர்,

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார், புள்ளியியல் ஆய்வாளர் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான பறக்கும் படையினர் கோவையை அடுத்த ராயர்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 18 வாக்கி டாக்கிகள் இரு ந்தன.

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் சொகுசு காரில் வந்தவர் விவேக் என்றும், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெறும் தனியார் நிறுவன நிகழ்ச்சிக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. ஆனால் அதற்கு முறையான அனுமதி வாங்காமல், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து 18 வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் கணியூர் சுங்கச்சாவடி அருகே மாவட்ட வரைகலை அலுவலர் ரவி மூர்த்தி தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் நிறுவன வேனை நிறுத்த சொல்லி சைகை செய்தனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் சென்றது. இதைதொடர்ந்து அந்த வேனை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் வேனுக்குள் ரூ.66 லட்சம் இருந்தது. உடனே வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் தனியார் வங்கி ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வேனில் வந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.

இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்