கம்பம் அருகே, கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல், 2 வாலிபர்கள் காயம் - நடவடிக்கை எடுக்க கோரி பஸ் மறியல்
கம்பம் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 வாலிபர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி ஒரு தரப்பினர் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர்.
உத்தமபாளையம்,
கம்பம் அடுத்துள்ளது நாராயணத்தேவன்பட்டி. இங்கு சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. திருவிழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்வார்கள். நேற்று 3-வது நாள் திருவிழாவாக மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது. இதில் இருதரப்பினர் ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிபரப்பு செய்தனர். அப்போது இருதரப்பு இளைஞர்களும் ஆடிக்கொண்டு வந்தனர். எனவே போலீசார் இருதரப்பு ஒலிபெருக்கிகளையும் நிறுத்துமாறு கூறினார்கள். இதில் ஒரு தரப்பினர் மட்டும் ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டனர்.
அப்போது ஒருதரப்பு இளைஞர்கள் மற்றொரு தரப்பினரையும் ஒலிபெருக்கியை நிறுத்த சொல்லுங்கள் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இருதரப்பு இளைஞர்களும் கைகளால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் விக்னேஷ் (வயது 18), முத்துக்குமார் (18) ஆகிய 2 வாலிபர்கள் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து வாலிபர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினர் நாராயணத்தேவன்பட்டியில் உள்ள சுருளி அருவி செல்லும் சாலையில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறியதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். எனினும் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.