நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் ஆணையாளர் விஜயலட்சுமி தகவல்
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி கூறி உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிளாஸ்டிக் பொருட்கள்
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காணிப்புக்குழு அலுவலர்களால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களை கண்டறியும் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் கண்காணிப்பு பணியால், மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் பிற இடங்களில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறிந்து கடந்த 1-ந் தேதி, 2-ந் தேதி நடந்த சோதனையில் 2 ஆயிரத்து 311 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை பல்வேறு நிறுவனங்களில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறிந்து ரூ.27 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இதுவரை ரூ.2 லட்சத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி கடைகள்
மேலும், இந்த பணியினை தீவிரப்படுத்தும்பொருட்டு, நேற்று தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் சிக்கன், மட்டன், மீன் ஆகிய 32 இறைச்சி கடைகளில் மாநகராட்சி கண்காணிப்பு ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போது, அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றில் 7 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இறைச்சி கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்து அதற்கான மாற்றுப்பொருட்கள் மற்றும் வாழை இலைகளை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.
எனவே நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் நடத்தும் நிறுவன உரிமையாளர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது ஆய்வின் போது தெரிய வந்தால், அபராதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.