பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியீடு: மாவட்டத்தில் 97.64 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 97.64 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 97.64 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ்-1 முடிவுகள்
தமிழ்நாட்டில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் மேற்பார்வையில் தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 55 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 194 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.
97.64 சதவீதம்
8 ஆயிரத்து 590 மாணவர்களும், 10 ஆயிரத்து 693 மாணவிகளும் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 283 பேர் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 281 மாணவர்களும், 10 ஆயிரத்து 547 மாணவிகளும் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 828 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.64 சதவீதம் தேர்ச்சி ஆகும். பிளஸ்-1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடந்த முதல் பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்ட மாணவ-மாணவிகள் சிறப்பான தேர்ச்சி பெற்று உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கடந்த ஆண்டை விட 2.24 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
கல்வி மாவட்டங்கள்
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 8 ஆயிரத்து 948 மாணவ- மாணவிகளில் 8 ஆயிரத்து 783 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.16 சதவீதம் ஆகும். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 473 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 5 ஆயிரத்து 275 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.38 சதவீத தேர்ச்சி ஆகும். திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 862 பேரில் 4 ஆயிரத்து 770 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 98.11 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
இந்த தேர்வு முடிவுகளை மாணவ- மாணவிகள் தங்கள் செல்போனில் வந்த மதிப்பெண் பட்டியலை பார்த்து அறிந்து கொண்டனர். சிலர் தங்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று பார்த்து தெரிந்து கொண்டனர்.