கரிசல்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்தினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
கரிசல்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிக்கபட்டுள்ளது. அதை மீறி நடத்தினால் விழாகுழுவினர் மற்றம் ஒருங்கிணைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
சிவகங்கை,
கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
சிங்கம்புணரி வட்டம், கரிசல்பட்டி கிராமத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். அதைதொடர்ந்து தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் அந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய இடம் குடியிருப்பு நிறைந்த பகுதியாகவும், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது என கண்டறியப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்த கிராமத்தில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் போலீஸ் சூப்பிரண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு மஞ்சுவிரட்டு நடத்த ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதனால் கரிசல்பட்டி கிராமத்தில் நாளை நடைபெறும் மஞ்சுவிரட்டுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.
இதையொட்டி தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் சிங்கம்புணரி தாசில்தார் ஆகியோர் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாளை மஞ்சுவிரட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மஞ்சுவிரட்டு நடைபெறாத வண்ணம் கண்காணித்து சட்டம்–ஒழுங்கை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினம் தடையை மீறி பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத குடியிருப்பு பகுதியில் மஞ்சுவிரட்டை நடத்தினால், கிராம மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விழா குழுவினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதி பெறாத இடத்திற்கு மஞ்சுவிரட்டு காளைகளை அழைத்து வருபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.