வானவில் : ‘ஜியோமி’ பேட்டரி மொபெட் அறிமுகம்
சீனாவின் ஜியோமி நிறுவனம் தற்போது பேட்டரியில் இயங்கும் மொபெட்டை அறிமுகம் செய்துள்ளது.
முகப்பு விளக்கு எல்.இ.டி. பல்பைக் கொண்டுள்ளது. இது பிரகாசமான ஒளி வெள்ளத்தை அளிக்கிறது. அத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உள்ளது. இதில் பேட்டரியின் திறன் அளவு, எவ்வளவு தூரம் ஓடும் என்பன போன்ற விவரங்கள் தெரியும்.
ஸ்மார்ட் போன் உள்ளிட்ட மின்னணு சாதனம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீனாவின் ஜியோமி நிறுவனம் தற்போது பேட்டரியில் இயங்கும் மொபெட்டை அறிமுகம் செய்துள்ளது. இரு சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபடப் போவதாக இந்நிறுவனம் சமீப காலமாக தெரிவித்து வந்தது. இதற்காக ரூ.8.76 கோடி (84.51 சீன யுவான்) நிதி ஒதுக்கி, தற்போது வெற்றிகரமாக பேட்டரியில் இயங்கும் மொபெட்டை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 2,999 சீன யுவான் (ரூ.31,110) என நிர்ணயித்துள்ளது.
இதற்கு ஹிமோ டி 1 என பெயர் சூட்டியுள்ளது. 350 வாட் மோட்டாரில் இயங்கும் இந்த மொபெட், சோதனை ஓட்டத்தின்போது 60 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்தது. கூடுதல் தூரம் செல்ல விரும்பினால் கூடுதல் பேட்டரி பேக், அதாவது வழக்கமான வாகனத்தில் 14 ஏ.ஹெச். பேட்டரி இருக்கும். தேவைப்பட்டால் 28 ஏ.ஹெச். பேட்டரியை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 120 கி.மீ. தூரம் பயணிக்க முடியும் என்று ஜியோமி நிறுவனம் தெரிவிக்கிறது. சொகுசான பயணத்தை உறுதி செய்வதற்காக இதன் முன்புறத்தில் டெலக்ஸோப்பிக் போர்க் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் இரண்டு பக்க ஷாக் அப்சார்பர் உள்ளது.
இதன் எடையும் குறைவு (53கி.கி). ஸ்மார்ட்போன் சந்தையில் கலக்கி வரும் ஜியோமி தயாரிப்புகளைப்போல பேட்டரி ஜியோமி ஸ்கூட்டர்களும் இந்திய சாலைகளில் வெகு விரைவிலேயே சீறிப்பாய உள்ளன.