மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் முத்தரசன் பேட்டி
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முத்தரசன் தெரிவித்தார்.
கோவில்பட்டி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவில்பட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் முடிவு தங்களுக்கு பாதகமாக இருக்கும் என்ற காரணத்தால்தான், ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை பறிப்பதற்கான நடவடிக்கையை சபாநாயகர் மூலமாக, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.
தேர்தலில் பல இடங்களில் வன்முறைகளும், வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற ஜனநாயக விரோத செயல்களும் நடைபெற்று முடிந்திருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இதன்மூலமாக மத்தியிலும், மாநிலத்திலும் நிச்சயமாக உறுதியாக ஆட்சி மாற்றம் ஏற்படும். மே மாதம் 23-ந்தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பா.ஜனதாவோடு சேர்ந்த காரணத்தால்தான், இந்த தோல்வியை நாங்கள் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என அ.தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வுடன் சேர்ந்ததால் தான் நாங்கள் தோற்றுப்போனோம். இல்லையென்றால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என பா.ஜனதாவினரும் அறிக்கை விடுவார்கள்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனை குறும்படமாக வெளியிட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை இல்லை. வடமாநிலங்களை சேர்ந்த இந்தி பேசும் இளைஞர்களுக்கு தான் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள், தீவிரவாதிகளை போன்று சோதனை செய்யப்படுகிறார்கள். இது மாணவர்களின் மனநிலையை பாதிக்க செய்கிறது. எனவே மாநில உரிமைகள், மாணவர்கள் நலன் என எதைப்பற்றியும் கவலைப்படாத அரசாக இங்குள்ள அரசு உள்ளது. இந்த தேர்தல் தீர்ப்பு என்பது பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சாதகமாகவும் அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. ஆட்சி மாற்றம் என்பது தவிர்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் அழகுமுத்து பாண்டியன், காசிவிஸ்வநாதன், இசக்கி, நகர செயலாளர் சரோஜா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.