செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் தந்தையை எரித்துக்கொன்ற மகள் கைது
கோவில்பட்டி அருகே செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் தந்தையை எரித்துக் கொன்ற மகளை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் வி.பி.சித்தன் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 66). ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. நாலாட்டின்புத்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். இவர் சம்பவத்தன்று இரவு பலத்த தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சுப்பையா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சுப்பையாவிடம் அவருடைய மகள் மூக்கம்மாள் (45) அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் சுப்பையா மீது மூக்கம்மாள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் வழக்குப்பதிவு செய்து மூக்கம்மாளை நேற்று கைது செய்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.