பல்லடத்தில் ம.நீ.ம. உறுப்பினர் மர்ம சாவு: விசாரணை நடத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மனு
பல்லடத்தில் ம.நீ.ம. உறுப்பினர் மர்மமான முறையில் இறந்தார். தனது கணவரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விஜயகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாலமுருகன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இருந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 19–ந் தேதி பல்லடத்தில் உள்ள மக்கள் நீதி மய்யம் தேர்தல் பணிமனை அலுவலகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் பாலமுருகனின் மனைவி விஜயகுமாரி தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
கடந்த மாதம் 18–ந் தேதி இரவு நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு எனது கணவர் பாலமுருகன் சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது தேர்தல் பணிமனை அலுவலகத்தில் மர்மமான முறையில் எனது கணவர் இறந்து கிடந்தார்.
முந்தைய நாள் இரவு அந்த கட்சியை சேர்ந்த செந்தில், சிவக்குமார், தண்டபாணி, கோவிந்தராஜ், மனோஜ், பரசிவம் ஆகியோர் எனது கணவருடன் இருந்துள்ளனர். மற்றவர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அவர்களுடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சம்பவம் பற்றி கேட்டபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதில் கூறினார்கள். ஆனால் இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை.
எனவே எனது கணவரின் செல்போன் எண் மற்றும் அவருடன் இருந்தவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்து எனது கணவரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக பெற்று உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.