அசுத்தம் அடைந்த கண்டதேவி ஊருணி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
நாணல் புதர்கள் மண்டியும், கருவேல மரங்கள் அடர்ந்தும் அசுத்தமாக காணப்படும் கண்டதேவி ஊருணியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி. இங்கு பிரசித்தி பெற்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பின்புறம் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய ஊருணி அமைந்துள்ளது. மிகவும் பிரபலம் வாய்ந்த இந்த ஊருணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத்தில் பல்வேறு ஊருணிகள் வறண்டு கிடந்த நிலையிலும், இந்த ஊருணி முழுவதும் தண்ணீர் நிரம்பி சுத்தமாகவும், பசுமையாகவும் காணப்பட்டது.
இதனால் ஏழை, எளிய மக்களின் நீச்சல் குளம் போல் இந்த ஊருணி அமைந்ததால் கண்டதேவி, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வெயில் காலங்களில் இந்த ஊருணியில் வந்து குளித்து விட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஊருணியை முறையாக பராமரிப்பு செய்யப்படாததால், தற்போது இந்த ஊருணி முழுவதும் நாணல் புதர்கள், கருவேல மரங்கள், அதலை செடிகள் மண்டி காணப்படுகிறது.
இதுதவிர இந்த ஊருணி அருகே குடிமகன்கள் இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு காலி மதுப்பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், காலி தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதற்கு முன்பு இந்த ஊருணியில் தண்ணீர் நிரம்பி காணப்பட்ட வேளையில் ஏராளமான மீன்கள் இருந்தன. ஆனால் தற்போது இந்த ஊருணியில் மீன்கள் குறைந்தும், அவற்றிற்கு போதிய உணவுகள் இல்லாததால் ஆங்காங்கே மீன்கள் இறந்தும் மிதந்த நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
இரவு நேரங்களில் சிலர் இந்த ஊருணி கரையோரம் அசுத்தம் செய்து விட்டு செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் வருபவர்கள் பார்த்தாலே முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. இதையடுத்து ஊருணியை சுத்தம் செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில் வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் 300–க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து 2 நாட்கள் தங்குகின்றனர். அவர்கள் இந்த பகுதி மக்களோடு சேர்ந்து, ஊருணியை சுத்தம் செய்ய உள்ளதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.