மடிகேரியில் உள்ள சொகுசு விடுதியில் சித்தராமையா திடீர் முகாம் - பரபரப்பு தகவல்கள்

மடிகேரியில் உள்ள சொகுசு விடுதியில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா திடீரென்று முகாமிட்டுள்ளார். இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2019-05-06 23:33 GMT
குடகு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா. இவர் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ.க்களை சித்தராமையா சமாதானப்படுத்தி வந்தார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா, ஹாசன், துமகூரு தொகுதிகளை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுத்ததால் காங்கிரசார் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அவர்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் சித்தராமையா ஈடுபட்டார். இதில் ஒரு சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளை சேர்ந்த காங்கிரசார் சமாதானம் ஆகி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர்.

இருப்பினும் மண்டியா, ஹாசன், துமகூரு தொகுதிகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சியினருடன், காங்கிரசார் இணைந்து செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதியில் சாமுண்டீஸ்வரி சட்டசபை தொகுதியை சேர்ந்த ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறினார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலால் சித்தராமையா பெரிதும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டின் போது சித்தராமையா மைசூரு-குடகு தொகுதியை சிரமப்பட்டு காங்கிரசுக்கு பெற்றார். மேலும் தனது ஆதரவாளரான விஜய்சங்கரை வேட்பாளராகவும் நிறுத்தினார். ஆனால் அவரது வெற்றிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற கவலையில் சித்தராமையா இருக்கிறார்.

இதனால் நேற்று முன்தினம் ரகசிய பயணமாக சித்தராமையா பெங்களூருவில் இருந்து மைசூரு டவுன் ராமகிருஷ்ணாநகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர், நாடாளுமன்ற தேர்தல் குறித்து விஜய்சங்கருடன் ஆலோசித்ததார். மேலும் தேர்தலின் போது ஜனதாதளம்(எஸ்) கட்சியினரின் செயல்பாடு குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

அப்போது மைசூரு-குடகு தொகுதியில் காங்கிரஸ் வெற்றிக்கு சாதகமாக தகவல் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் கடும் மனவேதனை அடைந்த சித்தராமையா குடகு மாவட்டம் மடிகேரிக்கு சென்று அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்து வருகிறார். அதாவது தனது பெயரில் அறை எடுத்து தங்காமல் பினாமி ஒருவரின் பெயரில் அறை எடுத்து சித்தராமையா அங்கு தங்கியிருப்பதாகவும், அதற்கான சில பரபரப்பு தகவல்களும் வெளியாகியுள்ளது.

அதே வேளையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் இழுக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பா.ஜனதாவினரின் முயற்சியை முறியடிப்பது தொடர்பாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகவும் தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசிக்கவும் சித்தராமையா அங்கே தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் சித்தராமையா சொகுசு விடுதியில் தங்கியிருப்பது பற்றி உள்ளூர் காங்கிரசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும், நேற்று முன்தினம் தான் அறையை முன்பதிவு செய்ததாகவும், நேற்று முன்தினம் மாலையே அவர் அங்கு வந்து தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சித்தராமையா என்ன காரணத்திற்காக அங்கு தங்கியுள்ளார் என்பதற்கு விடை தெரியவில்லை. இது காங்கிரசார் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்