திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் 10 நர்சரி, பிரைமரி பள்ளிகள் வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்பட்டு வருவதும் இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-06 22:15 GMT
திருவண்ணாமலை,

தமிழ்நாடு குழந்தைகள் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 நர்சரி பிரைமரி மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள விஸ்ருத்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மதுராம்பட்டு கிராமத்தில் உள்ள அவர்லேடி ஆப் த மிஷன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, யு.எஸ்.இளம் மழலையர் பள்ளி, வேங்கிக்காலில் உள்ள ஆல்பா இளம் மழலையர் பள்ளி, போளூர் ரேணுகாம்பாள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மேற்கு ஆரணி காமக்கூர்பாளையம் விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, தண்டராம்பட்டு தென்முடியனூர் சாலையில் உள்ள குளோபல் வித்யாஸ்ரமம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, ஆரணி ப்ரைன் கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கலசபாக்கம் விவேகானந்தா இளம் மழலையர் பள்ளி, வந்தவாசி டோரா கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி ஆகிய 10 பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்படுகிறது.

அங்கீகாரமின்றி செயல்படும் இந்த பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம். தற்போது இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அருகில் உள்ள நர்சரி பிரைமரி பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கவும், அந்த பள்ளிகளை மூடி சீலிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட பள்ளிகளில் படித்த மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்ட விவரத்தினை அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வரும் 41 நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த தேதிக்குள் அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்