நாங்கள் ஆட்சிக்கு வந்தால் “தமிழகத்தை 10 ஆண்டுகளில் சொர்க்கபூமியாக மாற்றுவோம்” சீமான் பேச்சு
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை 10 ஆண்டுகளில் சொர்க்கபூமியாக மாற்றுவோம்” என்று சீமான் கூறினார்.
தூத்துக்குடி,
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யாவை ஆதரித்து தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு சோதனை என்ற பெயரில் மனசோர்வை ஏற்படுத்தி விட்டனர். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ். அதற்கு ஆதரவு தெரிவித்தது தி.மு.க. அதனை செயல்படுத்தியது பா.ஜனதா. இந்தியாவில் அதிக மருத்துவக்கல்லூரி உள்ள மாநிலம் தமிழகம். ஆனால் நீட் தேர்வால் நம் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழக எல்லையில் இதுவரை 840 மீனவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். அதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது? வலிமைமிக்க கடற்படை இருந்தும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தடுக்கப்படவில்லை. சீமான் முதல்-அமைச்சராக இருந்தால் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் மீது கை வைக்க முடியாது. அப்படி வைத்தால் நான் அன்றே பதவியை ராஜினாமா செய்வேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெய்தல் படை உருவாக்கப்படும். விவசாயம் அரசு பணியாக்கப்படும். அந்தந்த பகுதியில் உள்ள வளங்களை கொண்டு தொழிற்சாலை அமைத்து அனைவருக்கும் வேலை வழங்குவோம். மீனவர்கள் நலம் காக்க தனித்துறை உருவாக்கப்படும். அவர்களுக்கு பணம் வழங்க தனி வங்கி தொடங்கப்படும்.
தமிழகத்தில் மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள் அனைவரும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் மக்கள் எதுவும் செய்ய வேண்டாம். ஒரே ஒரு ஓட்டு மட்டும் போதும். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் சமமான தரமான கல்வி வழங்குவோம். தமிழகத்தை 10 ஆண்டுகளில் சொர்க்கபூமியாக மாற்றுவோம். மீன்பிடி தொழிலை அரசு பணியாக மாற்றுவோம். படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். திராவிட கட்சிகள் அயோக்கியர்கள் என்று தெரிந்த பின்னரும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம். அவர்களை ஒழிக்க வேண்டும். புதிய தேசம் செய்ய வேண்டும். தூய ஆட்சி வர வேண்டும். அதற்கு எங்களுக்கு மக்கள் வாய்ப்பு தாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகர், மண்டல இளைஞர் பாசறை செயலாளர் வேல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.