தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேருவதற்கு வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர்,
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.ski-l-lt-r-a-i-n-i-ng.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன. மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.
இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரலின் படி மாணவர்கள் ஒற்றை சாரள முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய தொலைபேசி எண் 04329-228408-ஐ தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் www.ski-l-lt-r-a-i-n-i-ng.tn.gov.in என்ற இணையதளம் மூலமோ, தங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொண்டோ விபரம் பெறலாம். மேலும் 9499055881, 9499055883 என்ற தொலைபேசி எண்ணிலோ, git-i-p-e-r-a-m-b-a-lur@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இந்த தகவல் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.