திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் 9–ந்தேதி முதல் மாற்றம்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு

திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் வருகிற 9–ந்தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

Update: 2019-05-06 22:45 GMT

உடுமலை.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி,திண்டுக்கல் வழியாக மதுரை வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 16343) இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் மதுரையில் இருந்து எதிர் மார்க்கத்தில் (வண்டி எண் 16344) திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் போது உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்து 9.35–க்கு புறப்பட்டு சென்று வந்தது. அதேபோன்று மதுரையில் இருந்து வரும்போது உடுமலை ரெயில் நிலையத்திற்கு மாலை 6.40–க்கு வந்து 6.45–க்கு புறப்பட்டு சென்று வந்தது.

இந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் நேரம் வருகிற 9–ந்தேதி முதல் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த நேரம் மாற்றப்பட்டுள்ளபடி அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும். அந்த ரெயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு வழியாக பொள்ளாச்சிக்கு அடுத்த நாள் காலை 7.55 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து 8 மணிக்கு புறப்படும். அந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு காலை 8.30 மணிக்கு வந்து 8.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். (தற்போது வந்து செல்வதை விட 1 மணிநேரம் முன்னதாக வந்து செல்லும்). அந்த ரெயில் மதுரைக்கு மதியம் 12.15 மணிக்கு சென்று சேரும்.

பின்னர் அந்த ரெயில் (வண்டி எண் 16344) மதுரையில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு உடுமலைக்கு மாலை 5.45 மணிக்கு வந்து 5.50 மணிக்கு புறப்படும். அந்த ரெயில் மாலை 6.45 மணிக்கு பொள்ளாச்சிக்கு சென்று அங்கிருந்து 6.50 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 5.50 மணிக்கு சென்று சேரும்.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

உடுமலையில் கடந்த 2 மாத காலமாக அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு வந்த ரெயில் நேற்று உடுமலையில் நின்றது. தற்போது கோடை காலம் என்பதால் மதுரை, பழனிக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர்.

மேலும் செய்திகள்