தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கன மழை
தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
ஏரியூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில இடங்களில் நேற்று முன்தினம் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்றுக்கு பல இடங்களில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்து விழுந்தன. வீடுகளின் மேற்கூரைகளும் பறந்து சென்று விழுந்தன.
போச்சம்பள்ளி அருகே உள்ள பாண்டவர்குட்டை கிராமத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு அப்பகுதியை சேர்ந்த காளியம்மாள் என்பவருடைய வீட்டின் மேற்கூரை பறந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர்.
இதே போல கிருஷ்ணாபுரம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டின் மீது பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதில் அந்த வீடு முற்றிலும் சேதமடைந்தது. ராஜாவின் குடும்பத்தினர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். ஊத்தங்கரை அடுத்த கொட்டுக்காரன்பட்டி கிராமத்தில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் போடப்பட்டிருந்த மாட்டுக் கொட்டகை சரிந்து விழுந்ததில், அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டி ஒன்று பரிதாபமாக செத்தது.
பல பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பர்கூர்-9.80, அஞ்செட்டி-3.20, ஊத்தங்கரை-80, பெனுகொண்டாபுரம்-26.20, நெடுங்கல்-2, போச்சம்பள்ளி-4.20.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள புதுமாங் குறிஞ்சி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது37). இவருடைய மனைவி கோகிலா(30). விவசாயிகள். இவர்கள் குடும்பத்துடன் தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டு அருகே அர்ச்சுனன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மின் கம்பத்தில் உள்ள கம்பியில் அர்ச்சுனன் நேற்று முன்தினம் மாட்டை கட்டி வைத்திருந்தார்.
ஏரியூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் மின்கம்பத்தின் மீது விழுந்தது. மேலும் மின் கம்பியில் கட்டி இருந்த மாட்டை மின்சாரம் தாக்கியது. மாடு கத்தும் சத்தம் கேட்டு முருகேசன், கோகிலா ஆகியோர் வந்து பார்த்தனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் மாடு துடி, துடித்து செத்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.