“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான மருத்துவம் வழங்குவோம்” பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான மருத்துவம் வழங்குவோம்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

Update: 2019-05-05 23:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக்நகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. தென்மண்டல செயலாளர் சிவகுமார், தூத்துக்குடி வடக்கு மண்டல செயலாளர் இசக்கிதுரை, தெற்கு மண்டல செயலாளர் ஜெயசீலன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யா, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழகத்தில் அ.தி.மு.க. அதிகபட்சமாக 1½ ஆண்டுகள் மட்டுமே இருக்கும். அதன் பிறகு வரலாற்றில் அ.தி.மு.க. இருக்காது. ஜெயலலிதா இறந்த பிறகு, ஒரு சீட் கூட வாங்காத பா.ஜனதா தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. தமிழகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பெயருக்கு தான் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்து இருந்தால், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருக்க மாட்டார். தற்போது அ.தி.மு.க.வை மிரட்டி பா.ஜனதா கூட்டு வைத்து உள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ஊழல் ஒழியும், லஞ்சம் ஒழியும், கருப்பு பணம் வெளியே வரும் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. தீவிரவாதம் ஒழியும் என்றார்கள். ஆனால் தற்போது வரை தீவிரவாத தாக்குதல் நடந்து வருகிறது. ஜி.எஸ்.டி.யில் தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீதம் வரியும், மக்கள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இது எந்த விதத்தில் நியாயம். முட்டை கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்து உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் இது போன்ற ஊழல் தொடரும்.

தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு தி.மு.க. தான் முழு காரணம். தி.மு.க.வை ஒழித்துவிட்டால் அ.தி.மு.க. ஒழிந்து விடும். தமிழகம் கறை படுவதற்கு முழு முதல் காரணம் தி.மு.க. தான். அவர்களிடம் படித்து வந்தவர்கள் தான் அ.தி.மு.க.வினர். தமிழகத்தில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. அனைவரும் தான் இருக்கும் போதே தனது வாரிசுகளுக்கு இடம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பணம் கொடுக்க தான் தெரியும். மக்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். இந்த நிலை மாற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்குவோம். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை இந்த மண்ணில் இருந்து அகற்றப்படும். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்