நெல்லையில் 15 மையங்களில் நடந்தது, கடுமையான கட்டுப்பாடுகளுடன் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் - செயின், கம்மல், வளையலை கழற்றி கொடுத்தனர்
நெல்லையில் 15 மையங்களில் நேற்று ‘நீட்’ தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் செயின், கம்மல், வளையல் உள்ளிட்டவற்றை கழற்றி கொடுத்தனர்.
நெல்லை,
இந்தியா முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிக்குலேசன் பள்ளி, சாரதா கல்லூரி, புஷ்பலதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பிரான்சிஸ் சேவியர் பள்ளி, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி, ஜெயந்திரா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சங்கர்நகர் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஐன்ஸ்டின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி, திசையன்விளை வி.வி.பொறியியல் கல்லூரி, குமாரபுரம் பாலகிருஷ்ணா பள்ளி, வடக்கன்குளம் ராஜாஸ் பொறியியல் கல்லூரி ஆகிய 15 மையங்களில் நடந்தது.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் காலை 10 மணி முதலே தேர்வு மையத்துக்கு வர தொடங்கினர். சிலர் பெற்றோருடனும், சிலர் உறவினர்களுடனும் வந்து இருந்தனர். மதியம் 12-30 மணிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை, ஆதார் கார்டு, மற்றொரு அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1-30 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. மாணவிகள் செயின், மூக்குத்தி, கம்மல், ஜடை கிளிப், ரப்பர் பேண்ட் போன்றவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. சில மாணவிகள் கம்மல், ஜடை கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவற்றை அணிந்து வந்து இருந்தனர். அவர்கள் அவற்றை பெண் போலீசாரிடம் கழற்றி கொடுத்தனர்.
மாணவிகள் தனி அறையில் வைத்து சோதனை செய்யப்பட்டனர். முஸ்லிம் மாணவிகள் தங்களது பர்தாவை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.
மாணவர்கள் டீ-சர்ட், பெல்ட், கைக்கெடிகாரம், செயின், மோதிரம், பிரேஸ்லெட் அணிந்து வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. சில மாணவர்கள் கைக்கெடிகாரம், செயின் ஆகியவற்றை அணிந்து வந்தனர். அதை போலீசார் அகற்றினர். செல்போன், உணவு பொட்டலம், தண்ணீர் பாட்டில், கால்குலேட்டர் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வையொட்டி விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் குறித்து மாணவிகள் வேதனை தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ‘கம்மல் உள்ளிட்ட நகைகளை அணியக்கூடாது என்று கூறி அவற்றை அகற்றியதும், ஜடை போடக்கூடாது என்று கூறி முடியை அவிழ்த்து விட்டதும் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எங்களது பெற்றோர்கள் முன்பு நாங்கள் நகைகளை கழற்றுவது அவர்களுக்கு அவமானமாக உள்ளது‘ என்றனர்.
தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. மாவட்டத்தில் உள்ள மையங்களில் மொத்தம் 8 ஆயிரத்து 275 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 7 ஆயிரத்து 301 மாணவர்கள் மட்டும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 974 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு மையத்துக்கு வெளியே குவிந்து இருந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அவர்கள் சாலையோரம் அமர்ந்து இருந்தனர். நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி முன்பாக கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில மையங்களின் வளாகத்தில் பெற்றோர்கள் அமர வசதியாக இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.
தேர்வு நடந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை புதிய பஸ்நிலையம், சந்திப்பு பஸ்நிலையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மையங்களின் வெளியே மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. சில தனியார் பள்ளிகள் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோர்களையும் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு தங்களது பள்ளி வேனில் அழைத்து சென்றனர்.
தேர்வு மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என்றும், தேர்வு எழுத வந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் கூட மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவில்லை என்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘இந்த தேர்வு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கட்டுப்பாட்டில் நடைபெறவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகத்துக்கு தேர்வு நடப்பது குறித்து சரியாக தெரியவில்லை. இதனால் தான் எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை’ என்றார்.