மேலூர் அருகே கார் கவிழ்ந்து அரசு அதிகாரி பலி
மேலூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் அதில் சென்ற காரைக்குடியை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி பரிதாபமாக இறந்துபோனார்.
மேலூர்,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சுந்தரராஜன் (வயது 35). இவர் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சுந்தரராஜன், மதுரையில் வசித்து வரும் தனது தாய், தந்தையரை பார்ப்பதற்காக காரில் சென்றார். அங்கு தனது பெற்றோரை பார்த்துவிட்டு, அதே காரில் அவர் காரைக்குடிக்கு திரும்பினார்.
நள்ளிரவில் மதுரையில் இருந்து மேலூர் வழியாக அவர் சென்று கொண்டிருந்தார். மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பாலம் கட்டும் பணிக்காக சாலை பெயர்க்கப்பட்டு குண்டும், குழியுமாக இருந்தது. அந்த சாலையில் கார் சென்றபோது நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் சென்ற சுந்தரராஜன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழவளவு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் சுந்தரராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.