பெரம்பலூரில் வங்கி மேலாளர் வீட்டில் டி.வி., மடிக்கணினி திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரம்பலூரில் வங்கி மேலாளர் வீட்டில் டி.வி., மடிக்கணினியை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்,
கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் பினில் (வயது 31). இவர் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் பெரம்பலூர்- எளம்பலூர் செல்லும் சாலையில் உள்ள நேரு நகரில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பினிலின் மனைவி தனது குழந்தையுடன் கொல்லத்திற்கு சென்று விட்டார். இதனால் அந்த வீட்டில் பினில் மட்டும் தனியாக வசித்து, பணிக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு வந்த பினில் ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை என்பதால் இரவில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை பினிலின் வீட்டின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் உடனடியாக பினிலுக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த பீரோக்கள் திறந்து கிடந்து, துணிகள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த விலையுயர்ந்த டி.வி., மடிக்கணினி ஆகியவை திருடு போயிருந்தது. ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து டி.வி., மடிக்கணினி ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வங்கி மேலாளர் வீட்டிலேயே திருடு போன சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பினிலின் வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் சொந்த ஊரான பாடாலூர் அருகே உள்ள சனமங்கலத்திற்கு சென்றிருந்தார். அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் திருடு ஏதும் போகவில்லை.