2 மகள்களை கொன்று தாய் தற்கொலை குடும்ப தகராறில் விபரீதம்
குடும்ப தகராறில் 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் செவ்வந்தியும் (வயது 26), அதே பகுதியை சேர்ந்த சமையல் மாஸ்டர் ஜெய்சங்கரும் (30) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மதுஸ்ரீ (5), தனுஸ்ரீ (3) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ஜெய்சங்கருக்கு சில மாதங்களாக சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மது குடித்து விட்டு வீட்டிலேயே இருந்தார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த செவ்வந்தி, தனது 2 மகள்களுடன் பக்கத்து தெருவில் உள்ள தாய் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றார்.
செவ்வந்தியின் தாய் அம்மணியம்மாள் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்காக சென்று இருந்தார். மனோகரன் வீட்டின் வெளியே படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை அம்மணியம்மாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூஜை அறையில் செவ்வந்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது காலுக்கு அடியில் 2 மகள்களும் கிடந்தனர்.
உடனே அவர், பேத்திகளை தூக்கி பார்த்த போது கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செவ்வந்தி, மதுஸ்ரீ, தனுஸ்ரீ ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
குடும்ப தகராறில் 2 மகள்களையும் கொன்று, செவ்வந்தி தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக ஆரணி உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.